குஷ்புவுக்கு மட்டுமல்ல கோவில் என் நண்பனுக்கும்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பின், விடுமுறைக்கு நான் பிறந்த கிராமமாகிய பெருங்கோட்டூருக்கு பஸ் ஏறினேன். ஏற்றப்பட்டேன் என்று கூட சொல்லலாம். (சில பல காரணங்களால்😜 ).
நண்பகலில் பெருங்கோட்டூரில் என்னை தள்ளிவிட்ட டவுன்பஸ் தடதடவென பின்னணி இசையுடன் புழுதியை வாரி இரைத்தவாறே சென்றது.( ஹீரோ எண்ட்ரி....! ).
கிராமத்தில் இறங்கியதும் ஒரு நிசப்தம் என் காதுகளை தாக்கியது. மோட்டார் வாகன சப்தம், மனிதர்களின் ஓயாத பேச்சொலி இவற்றை பழகிய காதுகளுக்கு இந்த நிசப்தம் இதமாக இருந்தது.
ஊர்மடத்தில் ஒருக்களித்துப் படுத்திருந்த பெருசு, '' காரவீட்டு சங்காத்தா பேரந்தான! நல்லாருக்கீயா.?'' என பின்மண்டையை சொரிந்தவாறே குசலம் விசாரித்தது. வெள்ளந்தியான முகங்களையும் விசாரிப்புகளையும் கடந்து வீடு வந்து சேர்ந்தேன்.
கிராமத்தின் வாழ்க்கை முறையே அலாதியானது. எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிகாலை 5 மணிக்கெல்லாம் தெருவில் போகும் காளைமாட்டின் கழுத்து மணியோசை நம்மை எழுப்பிவிடும். விடிவதற்குள் காலைக்கடன் (ஆமா பெரிய ICICI பாங்க் கடன்....! ) கழிக்க குளத்தாங்கரைக்கு செல்ல வேண்டும். குளத்திலிருந்து திரும்பியதும் பாட்டி கொடுப்பாரே ஒரு கருப்பட்டிக்காப்பி, முற்றத்தில் இருக்கும் ஆட்டு உரலில் அமர்ந்தவாறே அதை உறிஞ்சி குடிக்க அது ஈஸோபேகஸ் வரை இனிக்கும்
குளிப்பதற்கு வயக்காட்டுக்குத் தான் போக வேண்டும். காலை பனித்துளி கால்களை நனைக்க வயல்வரப்பில் நடக்கும் போது மனதுக்கு ரெக்கை முளைக்கும். பம்புசெட் மோட்டார் தண்ணீரில் தலையைக் கொடுத்து குளிக்க தெறிக்கும் தண்ணீரில் வானவில் தோன்றும். குளித்துவிட்டு பசியோடு வீட்டுக்கு வரும் போது சூடான இட்டிலியும், பனியாரமும் காத்திருக்கும். வாழை இலையில் சூடான இட்லியையும் பொரிகடலை சேர்க்காத தேங்காய் சட்னியையும் வைக்க இட்லியின் சூட்டில் வாழை இலையும் கொஞ்சம் வெந்து இட்லியின் சுவையையும் மணத்தையும் அதிகமாக்க ஏலெட்டு இட்லிகள் பதவிசாய் உள்ளே போகும்.
ஆக காலை டிபன் முடிய பத்து மணியாகிவிடும். அதன்பிறகு தான் போரடிக்கும்.
பத்து மணிக்கு மேல் வெட்டியாக இருப்பவர்கள் நானும் எதிர்வீட்டு நாய் மணியும் தான் ( நாய்க்கும் நம்ம பேரை தான் வச்சிருக்காங்க )
அந்த நேரத்தில் அறிமுகமான நண்பர்கள் தான் கோட்டைச்சாமியும், முத்துப்பாண்டியும். முத்துப்பாண்டிக்கு பக்கத்து ஊர் உடப்பங்குளம்.
எனக்கு சகல விஷயங்களையும் (!) கற்று கொடுத்தார்கள். நீச்சல், மரம் ஏறுவது, கவண் கொண்டு புளியங்கா அடிப்பது, எருமை மாட்டின் மேலேறி விழாமல் சவாரி செய்வது போன்ற அத்தனைக்கும் குரு இவர்களே.! மூன்று பேரும் சேர்ந்து பண்ணிய சேட்டைகள் இருக்கே. கொஞ்சநஞ்சமல்ல.
பொழுதுபோகவில்லை என்ற நிலை மாறி போதவில்லையானது.
ஆலமரத்தடியில் கட்டப்பட்ட சிமெண்ட் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அந்த வழியே தண்ணீர் எடுத்து கொண்டு போகும் மதினிமார்களை வம்பு இழுத்துக் கொண்டும் மர்பி டிரான்சிஸ்டரில் சிலோன் ரேடியோ கேட்டுக் கொண்டும் கழிந்த பொழுதுகள் அழியாத கோலங்கள்.
"தொடர்ந்து வருவது பப்பிசை பாடல்கள்" என்று அப்துல் ஹமீது அறிவிக்க கள்ளுக்கடை பக்கம் போகாதே காலைப்பிடித்து கெஞ்சுகிறேன் என்று சிலோன் மனோகர் பாட ஆரம்பித்தார்
''கள்ளு குடிச்சிருக்கியா மாப்ள'' முத்துப்பாண்டியை பார்த்து கேட்டேன்
''ம்ம் குடிச்சிருக்கேனே''
''நல்லா இருக்குமா''
"நல்லா எல்லாம் இருக்காது. கொஞ்சம் புளிக்கும் ஆனா போதையா இருக்கும்"
"போதைனா எப்படி"
"உடம்பிலிருந்து மண்ட தனியா இருக்கிற மாதிரி இருக்கும் காலெல்லாம் தானா நடக்கும்"
போதைனா எப்படி இருக்கும் என்ற ஆவல் எனக்குள் வேகமாக எழுந்தது. களவும் கற்று மற என்ற பழமொழிக்கு நியாயம் கற்பிக்க வேண்டாமா !
மறுநாள் காலை பனங்காட்டுக்குச் சென்றோம். இடுப்பில் மண்கலயத்தோடு பனை மரத்திலிருந்து இறங்கிய அந்தப் பெரியவர் "சுண்ணாம்பு பதநீ இல்லையேப்பா" என்றார்.
"பதநீ வேண்டாம் கள்ளு தான் வேணும்" என்றோம்
ஒரு நிமிடம் என் முகத்தை உற்றுப் பார்த்தவர் அடையாளம் கண்டு கொண்டார்
உங்களுக்கு கள்ளு கொடுத்தேன்னு தெரிஞ்சது பெரியய்யா என் தோலை உரிச்சுடுவாக,
கண்டிப்பாக கள்ளு தரமாட்டார் என்பது உறுதியானதும் சோகத்தோடு வீடு திரும்புகையில் முத்துப்பாண்டி சொன்னான் "நாளைக்கு காலையில சீக்கிரமா போய் நாமளே கள்ள இறக்கி குடுச்சுடுவோம்"
மறுநாள் காலை ஆறு மணிக்கே போய் விட்டோம் பனை மரத்தில் ஏறி பழக்கம் இல்லை மூன்று பேருக்குமே. ஒவ்வொருவராக மாறி மாறி முயற்சி செய்து கடைசியாக நான் மனதில் கள்வெறியோடு ஒருவழியாக பாதி ஏறிவிட்டேன் அதற்கு மேலே ஏற முடியவில்லை அதைவிடக் கொடுமை இறங்கவும் தெரியவில்லை. கடைசியாக மேலே இருந்து சர்ரென்று வழுக்கிக்கொண்டே கீழே வர வயிற்றில் உள்ள தோல் உரிந்ததும் விஷயம் கேள்விப்பட்ட தாத்தாவால் முதுகுத் தோல் உரிந்ததும் வரலாறு.
இந்த நேரத்தில் தான் வரலாற்றை புரட்டிப்போட்ட ( ! ) சம்பவம் நடந்தது.
கோடை மழையால் ஏரி நிரம்பியிருக்க, நீந்தி குளிக்க போனோம். இளசுகளின் கூட்டம் களைகட்டியிருந்தது. மதகிலிருந்து சிலர் பல்டியடித்துக் கொண்டிருந்தார்கள். நீந்த தெரியாதவர்கள் கரையோரம் குளித்துக் கொண்டிருந்தார்கள். பொடியன்களின் ஹோ ஹோவென்ற சத்தமும் தண்ணீரில் தொப்பென்று குதிக்கும் சத்தமுமாக அந்த இடமே குதூகலமாக இருந்தது.
இந்த நேரத்தில் தான் பக்கத்து ஊர் பையன்களுக்கும் எங்கஊர் பையன்களுக்கும் ஒரு போட்டி உண்டானது. மதகிற்கு இந்தப்பக்கம் குதித்து முங்கு நீச்சலில் மடையை கடந்து வாய்க்கால் பக்கம் வரவேண்டும். பந்தயம் பத்து ரூபாய். தண்ணீரில் மூழ்கி 100 எண்ணும் வரை தம் பிடிக்க கூடியவன், முங்கு நீச்சலில் வல்லவன் ஆகிய தகுதிகளை உடைய நம்ம முத்துபாண்டியை களமிறக்கினோம்.
போட்டி ஆரம்பமானது. முத்துப்பாண்டி தண்ணீரில் குதித்து மூழ்கியதும் மனதுக்குள் ஒன்னு, ரெண்டு எண்ண ஆரம்பித்தேன். சிலர் இந்தப்பக்கம் நிற்க, எல்லாரும் வாய்க்கால் பக்கம் முத்துப்பாண்டி மேலலெழுவதை பார்க்க போனார்கள்.
எண்ணிக்கை நூறை தாண்டிவிட்டது. முத்துப்பாண்டி மேலே வரவில்லை. நிமிடங்கள் அதிகமாக எல்லார் முகத்திலும் கலவரம். கோட்டைசாமி அழுதேவிட்டான். பெரியவர்கள் ஏரியில் குதித்து தேட ஆரம்பித்தார்கள். சாயங்காலம் வரை தேடுதல் நடந்துகொண்டிருந்தது. முத்துப்பாண்டி கிடைக்கவேயில்லை.
இரவு மணி பத்து. மொட்டை மாடியில் படுத்திருந்த எங்களுக்கு தூக்கம் வரவில்லை. துக்கம் பாதி பயம் பாதி. முத்துப்பாண்டி பேயா வருவானோ !,அவனுக்கு சொர்க்கம் கிடைக்குமா நரகம் கிடைக்குமா புலம்பியவாறே படுத்திருந்தோம். ''மணி ! '' என்றழைத்தவாரே யாரோ படியேறி வரும் சத்தம் கேட்டது. இருட்டில் லேசாக தெரிந்த உருவம் நெருங்கி வரவர தெளிவாக தெரிந்தது. அது முத்துப்பாண்டி....!!
எங்களுக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பேய் பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டு பேச்சே வரவில்லை. கோட்டைச்சாமி மெதுவாக காலை தொட்டு பார்த்தான்.
' 'என்னாடா காலை பிடிக்கிற ?''
'' நீ சாகலையா.? ''
விழுந்து விழுந்து சிரித்தபடி முத்து சொன்னான்
'' நான் முங்கு நீச்சலில் வாய்க்கால் பக்கம் போய்ட்டேன்டா. வெளிய வரும்போது பார்த்தா, எங்க சித்தப்பா ! என்னை பார்த்திட்டார்னா அடி பின்னிருவார். அதான் திருப்பியும் முங்கி ஏரிப்பக்கம் மறுகரையில ஏறிட்டேன். என்னை யாரும் பாக்கலை. உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டேன். உங்களுக்கும் கேட்கல. அப்படியே ஊருக்கு போய்ட்டேன். அப்புறம் நடந்த கூத்தை கேள்விப்பட்டு உங்களை பார்க்க வந்தேன். ''
'' இப்ப என்னடா செய்றது ''
'' நான் தான்னு யாருக்கும் தெரியுமா ?''
'' தெரியாது ''
'' அப்ப இத்தோட எல்லாத்தையும் மறந்திருவோம்.''
மறந்தே போனோம். நான் மருத்துவரானேன். கோட்டைசாமி மிலிட்டரி போனான். முத்துப்பாண்டி சாஃப்ட்வேர் எஞ்சினியராகி அமெரிக்கா போய்விட்டான்.
பின் பலமுறை பெருங்கோட்டூர் போனாலும் ஏரிப்பக்கம் போக வாய்ப்பு அமையவில்லை.
அண்மையில் போக நேர்ந்தது. அப்போது தான் பார்த்தேன் ஏரிக்கரையில் புதிதாக ஒரு சிறு கோயிலை. கூட நடந்து வந்துகொண்டிருந்த மாமாவை கேட்டேன்.
''உங்களுக்கு தெரியாது மாப்ள ! முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஒரு பையன் ஏரியில விழுந்து செத்துப் போய்ட்டான். அவன் நம்ம பூசாரி கனவுல வந்து எனக்கு கோயில் கட்டி கும்பிடுங்கன்னு சொன்னான். இப்ப ஏரிக்கரையில காவல் தெய்வமா இருக்கான். இந்த கோயிலை கட்டி ரெம்ப வருஷமாச்சே ''
கோயிலினுள் எட்டிப் பார்த்தேன். சிலையில் முத்துப்பாண்டி முகம் தெரிகிறதாவென்று !!
முத்துப்பாண்டிக்கு மெயில் அனுப்ப வேண்டும்,தமிழ்நாட்டில் குஷ்புவுக்கு மட்டுமல்ல உனக்கும் கூட கோவில் இருக்கிறதென்று.......
ரசித்து வாசித்தேன்
ReplyDelete// குளித்துவிட்டு பசியோடு வீட்டை அடைய சூடான இட்டிலியும், பனியாரமும் காத்திருக்கும். ஆக காலை டிபன் முடிய பத்து மணியாகிவிடும். அதன்பிறகு தான் போரடிக்கும்.//
ReplyDeleteசாப்பிட்ட அப்புறம் என்ன வேலை , போர் அடிக்கத்தான் செய்யும் ..?!?
//எங்களுக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பேய் பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டு பேச்சே வரவில்லை. கோட்டைச்சாமி மெதுவாக காலை தொட்டு பார்த்தான்.
ReplyDelete//
செம செம .. நல்லா இருக்குங்க ..!!
அப்புறம் இந்த கமெண்ட் மாடுரேசன் எடுத்து விடுங்க ..!!
This comment has been removed by the author.
ReplyDeletenalla anubavam pola!!!
ReplyDeleteரொம்ப இயல்பான எழுத்து.. ரசித்தேன் டாக்டர் சார்!
ReplyDeleteமதுரை பாண்டி, மோகன்ஜி
ReplyDeletethanks for visiting my blog
:)நல்ல பதிவு
ReplyDeleteவலைமனையில் போட்டோ கமென்ட்ஸ் கொடுத்தமைக்கு நன்றி... தங்களுக்கான பேனரை தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன். கிடைத்ததா என தெரியப்படுத்தவும். நன்றி...
\\கிராமத்தின் வாழ்க்கை முறை எனக்கு ரொம்பப் பிடிக்கும்\\
ReplyDeleteஎனக்கும்தான் மருத்துவரே... கிராமத்து வாழ்வை சிறப்பாக பதிவு செய்துள்ளீர். வாழ்த்துக்கள்.
// நீச்சல், மரம் ஏறுவது, கவண் கொண்டு புளியங்கா அடிப்பது, எருமை மாட்டின் மேலேறி விழாமல் சவாரி செய்வது போன்ற அத்தனைக்கும் குரு இவர்களே// இதெல்லாம் அந்த வயசுல மட்டுமே பண்ணமுடியும். சூப்பர்ப்
ReplyDeleteநல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள்.
http://erodethangadurai.blogspot.com/
கிராமத்து வாழ்க்கை அழகை அழகா சொல்லி இருக்கீங்க நகைச்சுவை மிளிர... உங்க பிரெண்ட் கோவில் சூப்பர்...
ReplyDeleteNice Info Keep it up!
ReplyDeleteHome Based new online jobs 2011
Latest Google Adsense Approval Tricks 2011
Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.
More info Call - 9994251082
Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
New google adsense , google adsense tricks , approval adsense accounts,
latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,
Quick adsense accounts ...
More info Call - 9994251082
Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
Did u send mail to ur friend mr muthupandi?
ReplyDeleteWonderful writing with hasyam keep it up