Monday, September 27, 2010

குஷ்புவுக்கு மட்டுமல்ல கோவில், என் நண்பனுக்கும் எட்டாம்வகுப்பு பொதுத் தெர்வெழுதிய பின், விடுமுறைக்கு நான் பிறந்த கிராமமாகிய பெருங்கோட்டூருக்கு பஸ் ஏறினேன். ஏற்றப்பட்டேன் என்றே சொல்லலாம்.(என் தொல்லை பொறுக்கமாட்டாமல்).  நண்பகலில் பெருங்கோட்டூரில் என்னை தள்ளிவிட்ட டவுன்பஸ் தடதடவென பின்னணி இசையுடன் புழுதியை வாரி இரைத்தவாறே சென்றது.( ஹீரோ எண்ட்ரி....! ).

   கிராமத்தில் இறங்கியதும் ஒரு நிசப்தம் என் காதுகளை தாக்கியது. மோட்டார் வாகன சப்தம், மனிதர்களின் ஓயாத பேச்சொலி இவற்றை பழகிய காதுகளுக்கு இந்த நிசப்தம் இதமாக இருந்தது. ஊர்மடத்தில் ஒருக்களித்துப் படுத்திருந்த பெருசு, '' காரவீட்டு சங்காத்தா பேரந்தான! நல்லாருக்கீயா.?'' என பின்மண்டையை சொரிந்தவாறே குசலம் விசாரித்தது. வெள்ளந்தியான முகங்களையும் விசாரிப்புகளையும் கடந்து வீடு வந்து சேர்ந்தேன்.

  கிராமத்தின் வாழ்க்கை முறை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிகாலை 5 மணிக்கெல்லாம் தெருவில் போகும் காளைமாட்டின் கழுத்து மணியோசை நம்மை எழுப்பிவிடும். விடிவதற்குள் காலைக்கடன்(ஆமா பெரிய ICICI பாங்க் கடன்....! ) கழிக்க குளத்தாங்கரைக்கு செல்ல வேண்டும். குளத்திலிருந்து திரும்பியதும் பாட்டி கொடுப்பாரே ஒரு கருப்பட்டிக்காப்பி, முற்றத்தில் இருக்கும் ஆட்டு உரலில் அமர்ந்தவாறே அதை உறிஞ்சி குடிக்கும் போது ஆஹா இதமோ இதம்.

  குளிப்பதற்கு வயக்காட்டுக்குத் தான் போக வேண்டும். காலை பனித்துளி கால்களை நனைக்க வயல்வரப்பில் நடக்கும் போது மனதுக்கு ரெக்கை முளைக்கும். பம்புசெட் மோட்டார் தண்ணீரில் தலையைக் கொடுத்து குளிக்க தெறிக்கும் தண்ணீரில் வானவில் தோன்றும். குளித்துவிட்டு பசியோடு வீட்டை அடைய சூடான இட்டிலியும், பனியாரமும் காத்திருக்கும். ஆக காலை டிபன் முடிய பத்து மணியாகிவிடும். அதன்பிறகு தான் போரடிக்கும்.

  பத்து மணிக்கு மேல் வெட்டியாக இருப்பவர்கள் நானும் எதிர்வீட்டு நாய் மணியும் தான்( நாய்க்கும் என் பேரை தான் வச்சிருக்காங்க )

  இந்த நேரத்தில் அறிமுகமான நண்பர்கள் தான் கோட்டைச்சாமியும், முத்துப்பாண்டியும். முத்துப்பாண்டிக்கு பக்கத்தூர் உடப்பங்குளம்.

  எனக்கு சகல விஷயங்களையும் கற்று கொடுத்தார்கள். நீச்சல், மரம் ஏறுவது, கவண் கொண்டு புளியங்கா அடிப்பது, எருமை மாட்டின் மேலேறி விழாமல் சவாரி செய்வது போன்ற அத்தனைக்கும் குரு இவர்களே.! மூன்று பேரும் சேர்ந்து பண்ணிய சேட்டைகள்..!!!!!!!!!! அதற்கு தனியே ஒரு பதிவு இட வேண்டும்.(இருக்கு.. உங்களுக்கு..!!)

  பொழுதுபோகவில்லை என்ற நிலை மாறி போதவில்லையானது.

  இந்த நேரத்தில் தான் வரலாற்றை புரட்டிப்போட்ட ( ! ) சம்பவம் நடந்தது.


 கோடை மழையால் ஏரி நிரம்பியிருக்க, நீந்தி குளிக்க போனோம். இளசுகளின் கூட்டம் களைகட்டியிருந்தது. மதகிலிருந்து சிலர் பல்டியடித்துக் கொண்டிருந்தார்கள். நீந்த தெரியாதவர்கள் கரையோரம் குளித்துக் கொண்டிருந்தார்கள். பொடியன்களின் ஹோ ஹோவென்ற சத்தமும் தண்ணீரில் தொப்பென்று குதிக்கும் சத்தமுமாக அந்த இடமே குதூகலமாக இருந்தது.
 
  இந்த நேரத்தில் தான் பக்கத்து ஊர் பையன்களுக்கும் எங்கூர் பையன்களுக்கும் ஒரு போட்டி உண்டானது. மதகிற்கு இந்தப்பக்கம் குதித்து முங்கு நீச்சலில் மடையை கடந்து வாய்க்கால் பக்கம் வரவேண்டும். பந்தயம் பத்து ரூபாய். தண்ணீரில் மூழ்கி 100 எண்ணும் வரை தம் பிடிக்க கூடியவன், முங்கு நீச்சலில் வல்லவன் ஆகிய தகுதிகளை உடைய நம்ம முத்துபாண்டியை களமிறக்கினோம்.

  போட்டி ஆரம்பமானது. முத்துப்பாண்டி தண்ணீரில் குதித்து மூழ்கியதும் மனதுக்குள் ஒன்னு, ரெண்டு எண்ண ஆரம்பித்தேன். சிலர் இந்தப்பக்கம் நிற்க, எல்லாரும் வாய்க்கால் பக்கம் முத்துப்பாண்டி மேலலெழுவதை பார்க்க போனார்கள்.

  எண்ணிக்கை நூறை தாண்டிவிட்டது. முத்துப்பாண்டி மேலே வரவில்லை. நிமிடங்கள் அதிகமாக எல்லார் முகத்திலும் கலவரம். கோட்டைசாமி அழுதேவிட்டான். பெரியவர்கள் ஏரியில் குதித்து தேட ஆரம்பித்தார்கள். சாயங்காலம் வரை தேடுதல் நடந்துகொண்டிருந்தது. முத்துப்பாண்டி கிடைக்கவேயில்லை.

  இரவு மணி பத்து. மொட்டை மாடியில் படுத்திருந்த எங்களுக்கு தூக்கம் வரவில்லை. துக்கம் பாதி பயம் பாதி. முத்துப்பாண்டி பேயா வருவானோ !,அவனுக்கு  சொர்க்கம் கிடைக்குமா நரகம் கிடைக்குமா புலம்பியவாறே படுத்திருந்தோம். ''மணி ! '' என்றழைத்தவாரே யாரோ படியேறி வரும் சத்தம் கேட்டது. இருட்டில் லேசாக தெரிந்த உருவம் நெருங்கி வரவர தெளிவாக தெரிந்தது. அது முத்துப்பாண்டி....!!

  எங்களுக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பேய் பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டு பேச்சே வரவில்லை. கோட்டைச்சாமி மெதுவாக காலை தொட்டு பார்த்தான்.
 
  ' 'என்னாடா காலை பிடிக்கிற ?''

  '' நீ சாகலையா.? ''

  விழுந்து விழுந்து சிரித்தபடி முத்து சொன்னான் '' நான் முங்கு நீச்சலில் வாய்க்கால் பக்கம் போய்ட்டேன்டா. வெளிய வரும்போது பார்த்தா, எங்க சித்தப்பா ! என்னை பார்த்திட்டார்னா அடி பின்னிருவார். அதான் திருப்பியும் முங்கி ஏரிப்பக்கம் மறுகரையில ஏறிட்டேன். என்னை யாரும் பாக்கலை. உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டேன். உங்களுக்கும் கேட்கல. அப்படியே ஊருக்கு போய்ட்டேன். அப்புறம் நடந்த கூத்தை கேள்விப்பட்டு உங்களை பார்க்க வந்தேன். ''

  '' இப்ப என்னடா செய்றது ''

  '' நான் தான்னு யாருக்கும் தெரியுமா ?''

  '' தெரியாது ''

  '' அப்ப இத்தோட எல்லாத்தையும் மறந்திருவோம்.''


  மறந்தே போனோம். நான் மருத்துவரானேன். கோட்டைசாமி மிலிட்டரி போனான். முத்துப்பாண்டி சாஃப்ட்வேர் எஞ்சினியராகி அமெரிக்கா போய்விட்டான்.
பின் பலமுறை பெருங்கோட்டூர் போனாலும் ஏரிப்பக்கம் போக வாய்ப்பில்லை.

  அண்மையில் போக நேர்ந்தது. அப்போது தான் பார்த்தேன் ஏரிக்கரையில் புதிதாக ஒரு சிறு கோயிலை. கூட நடந்து வந்துகொண்டிருந்த மாமாவை கேட்டேன்.
''உங்களுக்கு தெரியாது மாப்ள ! இருபது வருஷத்துக்கு முன்னாடி ஒரு பையன் ஏரியில விழுந்து செத்துப் போய்ட்டான். அவன் நம்ம பூசாரி கனவுல வந்து எனக்கு கோயில் கட்டி கும்பிடுங்கன்னு சொன்னான். இப்ப ஏரிக்கரையில காவல் தெய்வமா இருக்கான். இந்த கோயிலை கட்டி இருபது வருஷமாச்சே ''

  கோயிலினுள் எட்டிப் பார்த்தேன். சிலையில் முத்துப்பாண்டி முகம் தெரிகிறதாவென்று !!

  முத்துப்பாண்டிக்கு மெயில் அனுப்ப வேண்டும்,தமிழ்நாட்டில் குஷ்புவுக்கு மட்டுமல்ல உனக்கும் கூட கோவில் இருக்கிறதென்று.......

Saturday, September 18, 2010

மாரடைப்பு - HEART ATTACK -தெரிந்து கொள்ள வேண்டியவைஇந்தியர்களை அதிகம் தாக்கும் நோயாக மாறியுள்ள மாரடைப்பை பற்றி தெரிந்துகொள்ளவே இந்த பதிவு.

இதயத் தசைகளுக்கு செல்லும் இரத்தகுழாயில் அடைப்பு ஏற்படுவதையே மாரடைப்பு - HEART ATTACK - ACUTE MYOCARDIAL INFARCTION - என்கிறோம்.


எந்த வயதில் மாரடைப்பு வரும்...?

முன்பெல்லாம் 50-ஆக இருந்த மாரடைப்பு வரும் சராசரி வயது, நமது பழக்கவழக்கங்களின் காரணமாக வெகுவாக குறைந்துள்ளது. சமீபத்திய, நடிகர் முரளியின் மரணமே சான்று. கடந்த 3 வருடங்களில், 45 வயதிற்குள்ளாக மாரடைப்பு ஏற்படும் எண்ணிக்கை 5 மடங்கு அதிகறித்துள்ளது. பெண்களுக்கு பொதுவாக மாதவிலக்கு நிற்கும் காலம் வரை இந் நோய்க்கான சாத்தியகூறு குறைவு.

மாரடைப்பிற்கான அறிகுறிகள்

நெஞ்சின் மைய பகுதியில் வலி ( கவனிக்க - சினிமாக்களில் காண்பிப்பது போல இடது பக்கத்தில் அல்ல ) இருக்கும்.
வலியானது தொண்டை, கீழ்த்தாடை, தோள் பகுதிகளுக்கு பரவுவது போல தெரியும். சிலருக்கு வலியை விட எரிச்சல் அதிகமாக இருக்கும். இதை அஜீரணம் என தவறாக எடுத்துக் கொள்வர்.

அதிகமான வியர்வை இருக்கும். வாந்தி குமட்டல் இருக்கலாம்.

நெஞ்சில் ஒருவிதமான அசௌகரியம், (discomfort) படபடப்பு, போன்றவை மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

நீரழிவு (diabetes) நோயுள்ளவர்களுக்கு வலியில்லாத மாரடைப்பு (silent infarction) எற்படும். வியர்வை மட்டுமே இருக்கும் - வலி கொஞ்சம் கூட இருக்காது.

மேலும் வேகமாக நடக்கும் போது, படிகளில் ஏறும் போது நெஞ்சில் வலி ஏற்படுவது - நின்றவுடன் வலி குறைவதுவும் இதய வலி (angina) தான்.

மேற்சொன்ன அறிகுறிகள் சிலருக்கு மாறுபடலாம்.

காரணங்கள்

நீரழிவு நோய், அதிக இரத்த அழுத்தம், இரத்ததில் அதிக கொலஸ்டிரால், புகைப்பழக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.

நெஞ்சுவலி வந்தவுடன் என்ன செய்ய வேண்டும்.?

மேற்சொன்ன அறிகுறிகள் ஒருவருக்கு தென்பட்டால் அவரை அப்படியே படுக்க வைக்க வேண்டும். ஒரு அடி கூட அவர் நடப்பது நல்லதல்ல.
SORPITRATE 5 mg மாத்திரையை நாக்கிற்கு அடியில் வைக்கலாம். மிக விரைவாக நல்ல மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும்.

சில தவறான கணிப்புகள்

''காலையில் ரெண்டு பஜ்ஜி சாப்பிட்டேன் அதிலிருந்து நெஞ்சு எரிஞ்சுகிட்டே இருக்கு. லேசா வியர்க்குது '' என்ற ஒருவருக்கு ECG எடுத்து பார்க்கும் போது அவருக்கு மாரடைப்பு இருப்பது தெரியவந்தது. அவரது வியர்வையே நோய்கணிப்பிற்கு எனக்கு உதவியது. எனவே நெஞ்சுவலி இல்லாவிட்டாலும் கூட எரிச்சல், வியர்வை இருந்தால் அது மாரடைப்பாக இருக்கலாம்.

அதே போல் சர்க்கரை நோயாளிகளுக்கு எப்போதாவது HYPO GLYCEMEA எனப்படும் இரத்த சர்க்கரைகுறைவு எற்படும். அச்சமயம் படபடப்பு, லேசான வியர்வை எற்படும். இதில் அனுபவபட்டவர்கள் மாரடைப்பு ஏற்படும் பொழுது கூட அதை  HYPO GLYCEMEA என தவறாக கணித்து ஜீனியை சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். எனவே நீரழிவு நோயினருக்கு அதிக வியர்வை ஏற்பட்டால் அது மாரடைப்பாக இருக்கலாம் என கவனத்தில் கொள்ள வேண்டும்.

வராமல் தடுக்கும் வழி என்ன?

மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையை அடையும் முன்பே இறப்பவர்கள் 20%. மருத்துவமனையில் இறப்பவர்கள் 20% என்றெல்லாம் புள்ளி விபரங்கள் சொல்கின்றன. இந்நோய் வராமல் தடுப்பது அவசியமாகும்.

தினமும் ஒரு மணி நேரமாவது ஓரளவு வேகமாக, நன்கு வியர்க்கும் படி நடக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் FASTING BLOOD SUGAR -110 mg% -க்கு அதிகமாகாமல் பார்க்க வேண்டும்.

கொலஸ்டிரால், இரத்த கொதிப்பு அதிகமுள்ளவர்கள் இவைகளை கட்டுபடுத்தவேண்டும்.

புகை பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா செய்யலாம்.

சுருக்கமாக எழுதிவிட்டேனென்று எண்ணுகிறேன். ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, விளக்கம் வேண்டுமானாலோ பின்னூட்டம் இடுக.! பதில் எழுதுகிறேன்.

Monday, September 6, 2010

பதிவுலகில் சாதனை- ஒரு மணி நேரத்தில் 100 வோட்டுகள் .
தனது முதல் பதிவை வெளியிட்டு ஒரு மணி நேரத்திலேயே இன்ட்லியில் 100 வோட்டுக்கள் பெற்று சாதனை புரிந்த மதுரையை சேர்ந்த புண்ணாக்குபாண்டி_யிடம் நமது நிருபர் எடுத்த பேட்டி.....

'' புண்ணாக்குபாண்டிங்கறது உங்க உண்மையான பெயரா.? ''

'' இல்லீங்க..எம்பேரு அழகர்சாமிங்க. நமக்கு புண்ணாக்கு வியாபாரம். அதனால எல்லாரும் என்னை புண்ணாக்குபாண்டின்னு கூப்புடுவாங்க. அந்த பேரையே நம்ம பிளாக்குக்கு வச்சிடேங்க. ''

'' நீங்க என்ன படிச்சிருக்கீங்க? ''

'' ஆறாப்பு பாஸுங்க. பிற எப்பிடி இதெல்லாம்னு நினைக்கீங்களா ? .நமக்கு எல்ப்புக்கு ஒரு அசிட்ட்ண்ட் போட்டிருகேன். ( என்னது.. அசிட்டண்டா..?...ஓ அசிஸ்டண்டா...!) பன்னெண்டாப்பு படிச்சிருக்கான். டேய்.. முருகா ஐயாவுக்கு வணக்கம் போடுப்பா ''  '' வணக்கம்னே '' ( இது வேறயா )

'' ஒரு மணி நேரத்தில 100 வோட்டு வாங்கற அளவுக்கு அப்படி என்ன எழுதினீங்க? ''

'' நெறய எழுதனும்னு நெனைச்சேன். ஆனா சுவிச்சு போடுல இருந்து ஒவ்வொரு சுவிச்சா தேடி அமுக்கி எம் பேர எழுதறதுக்கே ஒரு மணி நேரம் ஆயிருச்சு. சரி போதும்னு விட்டுட்டேன். '' ( அடப்பாவி .! கீபோர்ட சுவிச்சு போடுங்கறான். கீய சுவிச்சுங்கறான். இன்னிக்கு யார் முகத்தில முழிச்சேன்னு தெரியலயே .!)

'' இந்த பதிவுக்கு எப்படி 100 வோட்டு? ''

'' ஒரு வோட்டுக்கு 200 ரூபா குடுத்து போடச்சொன்னேன். அப்பத்தான் பேமசாகுமாம், எல்லாரும் படிப்பாய்ங்கலாம். முருகன் தான் சொன்னான். எப்பிடி...!!.. மதுரக்காரய்ங்கன்னா சும்மாவா !..( ஆஹா இப்பவே கண்ண கெட்டுதே..)

'' வேறென்ன பிளான் வெச்சுருக்கீங்க?  ''

'' யாருமே கமண்ட்டு எழுதலயாம். அதனால ஒரு கமண்ட்டுக்கு 150 ரூபா பிக்ஸ் பன்னீருக்கேன். ( டேய் ரெம்ம்ப ஓவரா போற...! )

'' இவ்வளவு செலவு பண்ணி பிளாக் ஆரம்பிச்சதோட நோக்கம் என்ன.? ''

'' இதுல தான் யாரனாலும் திட்டலாமாமே. .புண்ணாக்கு வாங்கிட்டு பணம் கொடுக்காதவய்ங்க, கடன் வாங்கிட்டு திருப்பி கொடுக்காதவய்ங்க, எல்லாத்தையும் ஆத்தா அக்கான்னு திட்டப்போறேன். ( என்ன ஒரு வில்லத்தனம்.....! )

'' பதிவுலகத்துக்கு என்ன சொல்ல போறீங்க? ''

'' என்னது பதிவுலகமா.? இதென்ன புதுசா இருக்கு.!.நம்ம இந்தியாவ விட பெரிய உலகமா.?..''

'' !!!!!????@#$%!!!!!! ''

'' முருகா..! ஐயா களப்பா இருக்க மாதிரி தெரியுது.. சில்லுனு ஒரு ஜிகர்தண்டா கொடுப்பா ''

Friday, September 3, 2010

இப்படியெல்லாமா நடக்கும்- just for fun -(18+)

  ஒரு மருத்துவனின் கடமை நோயாளியை குணமாக்குவது மட்டுமே!...அது எந்த மருத்துவ முறையில் என்பதல்ல. அலோபதியோ, சித்தாவோ, ஹோமியோபதியோ, அல்லது சிரிப்போபதியோ...!
 
 முதலில் சிரிப்பில் ஆரம்பிப்போம்.

                             சொர்க்கமா நரகமா

 இறந்தவுடன் மேலோகம் செல்லும் சித்த, அலோபதி, ஹோமியோபதி மருத்துவர்கள் மூவர் கடவுளின் திருச்சபையில் தண்டனைக்காக காத்திருக்கிறார்கள்

அவர்களிடம் கடவுள் ''உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன். சரியான பதிலைச் சொன்னால் சொர்க்கத்துக்கு போகலாம். இல்லையென்றால் நரகம் தான்'' என்றார்.

  முதலில் சித்த மருத்துவரிடம் ''சில வருஷங்களுக்கு முன்னால் ஒரு சொகுசு கப்பல் கடலில் மூழ்கியதே .! அதன் பெயர் என்ன ? '' என்றார்.

  ''டைடானிக்''

  ''சரி, நீ சொர்க்கத்துக்கு போ''

  அடுத்து ஹோமியோபதி மருத்துவரிடம் '' அந்த கப்பல் மூழ்கியதில் எத்தனை பேர் இறந்தார்கள் ? ''

  '' 1517 ''
  
  ''சரி, நீயும் சொர்க்கத்துக்கு போகலாம் ''.

  அடுத்து அலோபதி மருத்துவரிடம் கேள்வி கேட்டார் கடவுள்

 '' இறந்தவங்க பெயரெல்லாம் வரிசையாக சொல்லு..?..''

  ( இதை எழுதியதும் என் மனைவியை படிக்க சொன்னேன். படித்துக்கொண்டிருக்கிறார்.. என்ன சொல்கிறார் என்று பார்ப்போ........நோ.!.... பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் ஆமா.....! 
              பின் குறிப்பு; என் மனைவி ஒரு அலோபதி மருத்துவர் )


                            கேட்க கூடாத கேள்வி(18+)  தங்களது 25ஆவது திருமண நாளை கொண்டாடிய கணவர் ( தாத்தா ) தன் மனைவியிடம் கேட்டார்

  ''நமக்கு கல்யாணமாகி 25 வருஷமாச்சு. இத்தனை வருஷத்தில நீ எப்போதாவது வேற ஆம்பளையோட தப்பு பண்ணியிருக்கிறியா.?.அப்படி இருந்தாலும் பரவாயில்லை சொல்லு. நான் கோவிச்சுக்க மாட்டேன்.''

  சற்று தயக்கத்துடன் மனைவி '' ஆமா , மூன்று தடவை மட்டும்.'' என்றார்.

  ''பரவாயில்லை சொல்லு''

  ''ஒரு தடவை நீங்க எதிர் வீட்டுக்காரரை அடிச்சுடீங்கல்ல. அப்ப உங்களை அரஸ்ட் பண்ணின இன்ஸ்பெக்டர், FIR போடாம, உடனே உங்களை வீட்டுக்கு அனுப்பினாரே எப்படின்னு நினைக்கிறீங்க ..''

  ''ஓகோ அதான் மேட்டரா.! சரி இது எனக்காக தானே பண்ணின.!.பரவாயில்ல...அடுத்து..?''

 ''உங்களுக்கு அப்பன்டிஸைடிஸ் வந்தப்ப, பணம் கட்டினால் தான் ஆபரேஷன் செய்வேன்னு சொன்ன டாக்டர், பணம் வாங்காமலேயே ஆபரேஷன் பண்ணினாரே எப்படி...!..''

  ''இது துரோகம் இல்லை. தியாகம். சரி... மூனாவது..?.''

  ''நீங்க ரோட்டரி கிளப் பிரசிடெண்ட் எலெக்ஷனில் ஜெயிக்கறதுக்கு 200 வோட்டு குறைவாகத் தானே இருந்தது. ஆனா ஜெயிச்சீங்களே எப்படி...!''

  ''...???!@#$%^&**........''  
 
 (எப்பூடி..!!!!)

  (கடை விரித்தேன், கொள்வாரில்லை. சரக்கை மாற்றி பார்ப்போமே. என்று தான்..)