Friday, March 11, 2011

தலைவலிக்கு சிறந்த மருந்து

       காலையில் எழுந்திருக்கும் போதே தலை கிண்ணென்றிருந்தது. கண்ணை திறக்க முடியவில்லை. நேற்றிரவு ' நடுநிசி நாய்கள் ' பார்த்த பாதிப்போ என்னவோ. 
    '' ராதா ''வென கூப்பிட வாயெடுத்தேன். அதற்கு முன்பே மெல்லிய கொலுசொலி.
      தலைக்கு குளித்து சரியாக துவட்டாத கூந்தலின் நுனியில் ஈரம் சொட்ட, அப்போதே மலர்ந்த பூவாக அருகில் வந்து என் தலைக்கருகில் கட்டிலில் அமர்ந்தாள், என் முகத்தை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவள் '' என்னங்க தலைவலியா ? '' என்றாள் நான் சொல்லாமலே.
      மெல்லிய விரல்களால் சற்று சூடாக இருந்த என் நெற்றியை தொட்டாள். வைகறையில் பறித்த மல்லிகை இதழ்களால் தொட்டது போலிருந்தது. அவள் கையை என் நெற்றியுடன் அழுந்த பிடித்தேன்.
     '' நேற்று நல்லாத்தானே தூங்கினீங்க '' என்றவாறு என் தலையை மெதுவாக கோதினாள்.  கண்களை திறந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். வட்ட முகத்தில் சற்றே பெரிய கண்கள். கூரான நாசி .சிவந்த சிறிய ஆரஞ்சு சுளை போன்ற இதழ்கள். அவள் சிரிக்க நினைத்ததை கன்னக்குழியும் கண்களும் காட்டி கொடுத்தன.
    '' என்ன பார்வை ''
    '' இல்ல... பார்த்தால் பசி தீரும்னு சொல்வாங்க. தலைவலி தீருமான்னு தெரியல.''
    '' நிஜமாகவே தலைவலி தானா '' என்றாள் புன்முறுவலுடன். 
    '' தலை ரெம்ப பாரமா இருக்குடி ''
      சிரித்தவாறே என் நெற்றியில் அவள் கன்னம் அழுந்த என்மீது சாய்ந்தாள். ஈர கூந்தல் என் முகத்தில் படர்ந்தது. கன்னத்தின் குளிர்ச்சி என் நெற்றிக்கு பரவ, சோப் வாசமும் ஷாம்பு வாசமும் கலவையாக என் நாசியை வருட, அவள் மூச்சுக்காற்று லேசான சூட்டில் முகத்தில் பட எனக்கு என்னவோ செய்தது. கண்களை மூடி படுத்திருந்தேன். மெத்தென்று நெஞ்சில் சாய்த்துக்கொண்டாள். 
    '' இப்ப வலி குறையுற மாதிரி இருக்கு ''  நெஞ்சோடு சேர்த்தணைத்து முத்தமிட்டாள்.
    '' இன்னும் குறையுது.''
    '' டாக்டர் ஃபீஸ் என்ன கொடுப்பீங்க.''
    '' என் உயிரை கூட.''
    '' அச்சச்சோ.''.என் வாயை மூடினாள் முதலில் விரல்களால் .....  எத்தனையோ பெண்கள் அழகாக இருப்பார்கள். என்னவள் ராதா அழகு மட்டுமல்ல அன்பால் அழகை நூறு மடங்கு அதிகமாக்கியவள். 
      கொஞ்ச நேரம் தூங்கிவிட்டேன். ராதாவின் இதழ்கள் என் நெற்றியில் ஒத்தி பிரியும்போது தான் விழித்தேன். தலைவலி முற்றிலும் இல்லை.
     ''காபி தரவா ? '' என்று எழுந்து போனவள் சூடான காபியுடன் என்னருகில் வந்தாள். கால் இடரியதா என்னவென்று தெரியவில்லை காபியை என் முகத்தில் கொட்டிவிட்டாள். அம்மா!!!!!!!.....திடுக்கென முழித்துப் பார்க்கிறேன் முகத்தில் தண்ணீர். கையில் செம்புடன் என் மனைவி கனகா.
     ''காலையிலிருந்து நாயா வேலை பார்த்துட்டு இருக்கிறேன் இன்னும் என்ன தூக்கம்...பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்ப வேண்டாமா. மனுஷனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு வேணும்....'' கத்திக்கொண்டிருந்தாள்.
      மீண்டும் தலை வலிப்பது போலிருந்தது. கண்களை மூடி ராதாவை தேடலானேன்.
  
     பின்குறிப்பு : மருத்துவ பதிவென்று படிக்க வந்தவர்கள் மன்னிக்கவும்

     பின்குறிப்பு 2 : இதை படித்து முடித்ததும் உங்களுக்கு லேசாக பெருமூச்சு வந்தால் ..''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்''