Thursday, August 4, 2011

''ஹேர்டை'' வீட்டுக்குள் இருக்கும் விஷம்





இப்போதெல்லாம் எல்லார் வீட்டு பாத்ரூமிலும் சோப்பு, ஷாம்பூ, வரிசையில் இடம்பிடிக்கும் மற்றொரு பொருள் ஹேர்டை. வாலிபர்கள் முதல் வயோதிகர்கள் வரை எல்லோரும் உபயோகிக்கிறார்கள். இதன் பின் விளைவுகள் பற்றி யாருக்காவது தெரியுமா?

Monday, August 1, 2011

''மயக்கம் ''அறியாமல் நீங்கள் நிகழ்த்தும் மரணங்கள்!




சமீபத்திய இரண்டு சம்பவங்கள் (மரணங்கள்) எனக்கு இந்த பதிவை எழுத தூண்டியது.

ஒன்று.

நான் அடிக்கடி செல்லும் எனது நண்பரின் எதிர் வீட்டு பாட்டி. அறுபது வயதை நெருங்கும் அவருக்கு சுகர், பிரஷர், இதய நோய், போன்ற எதுவும் கிடையாது. நல்ல ஆரோக்கியமானவர். ஒருநாள் காலைமுதல் உண்ணா நோன்பு இருந்தவர், மாலை வெந்நீரில் குளித்துக் கொண்டிருக்கும் போது, இரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்திருக்கிறார். சப்தம் கேட்டு பாத்ரூமுக்குள் சென்ற மகள் (அவர் ஒரு கல்லூரி பேராசிரியை) அவரை தூக்கி உட்காரவைத்துவிட்டு மற்றவர்களை கூப்பிட்டிருக்கிறார். தற்செயலாக சென்ற நான் பார்க்கும் போது பாட்டி இறந்திருந்தார்.

Tuesday, July 26, 2011

சிக்கனா? மட்டனா? எது நல்லது...........




அசைவ உணவுகளில் முதல் இரண்டு இடங்களில் இருப்பது சிக்கனும் மட்டனும் தான். இதில் உடலுக்கு நல்லது எது என்ற விளக்கமே இந்த பதிவு.
பொதுவாக பலர் மட்டனில் கொழுப்பு அதிகம் என்று சிக்கனை அதிகமாக சாப்பிடுகிறார்கள். இது சரிதானா?

Friday, July 15, 2011

தங்கபாலு vs 'பவர் ஸ்டார்' காமெடி பே( ா‍)ட்டி

 

தமிழ் நாட்டின் சிறந்த நகைசுவையாளர்களான காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், 'பவர் ஸ்டார்' டாக்குடர் சீனிவாசனும், விகடன் வாரஇதழுக்கு பேட்டியளித்துள்ளார்கள். அதில் எது அதிகமாக சிரிப்பை வரவைத்தது என்பதை உங்கள் வாக்கெடுப்புக்கு விட்டுவிடுகிறேன்

Monday, June 27, 2011

இயக்குனர் பாலாவின் வாய்கொழுப்பு

      


          அவன் இவன் படத்தில் தீர்த்தபதி (ஹைனஸ்) என்ற ஜமிந்தார் கேரக்டர் வரும். படத்தில் வரும் சிருவன் கூட ''யோவ் ஹைனஸூ'' என்று மரியாதையாக (!) அழைப்பான். கடைசியில் வில்லன், அம்மணமாக்கி அடித்துக்கொல்வான். இவ்வாறு சிறந்த (!) முறையில் அந்த கேரக்டர் அமைக்கப்பட்டிருக்கும்.

         மற்றொரு காட்சியில் ஆர்யா, சொரிமுத்தையனார் சாமி என்று சொல்லும் போது குரங்கு சொறிவது செய்கை காட்டுவர்.

         இது போன்ற கேனத்தனமான காட்சிகளால் நெல்லை மாவட்ட மக்கள் கொதிப்பாகியுள்ளனர். 'சொரிமுத்து அய்யனார் பக்தர்கள்’ என்ற பெயரில் ஒட்டப்பட்டு இருக்கும் கண்டன போஸ்டர்களில், 'சிங்கம்பட்டி ஜமீன்தாரையும், சொரிமுத்து அய்யனார் கோயிலையும் அவமதிக்கும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். படத்தை இயக்கிய பாலா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்னதான் காமெடிக்காக என்றாலும் கூட லட்சக்கணக்கான பக்தர்கள் வணங்கும் கடவுளையும், மதிக்கும் ஜமீன்தாரையும் அவமதிப்பது சரிதானா?

      சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியை எனக்கு நன்கு தெரியும். இன்றும் மக்களிடம் நன்மதிப்போடும், செல்வசெழிப்போடும் வாழ்ந்து வருபவர். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கம்பட்டி ஜமீன் மூலமாக மருத்துவ மனைகள், கல்விக்கூடங்கள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

     அவரிடம் இதுபற்றி கேட்ட போது
       ''சிங்கம்பட்டி சமஸ்தானத்துக்கு, ஆயிரம் வருடப் பாரம்பரியம் உண்டு. நாங்கள் சாதி, மத வேறுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் அன்பாக இருப்பதால், மக்களும் எங்கள் மீது பிரியமாக இருக்காங்க. எனக்கு 80 வயதாகிறது. ஒரு துறவியின் மனநிலைக்குப் போயிட்டேன். அதனால், என் மீது பூவை எறிந்தாலும், கல்லை வீசினாலும் கவலைப்பட மாட்டேன். படத்தில் என்னைத் தவறாக விமர்சனம் செஞ்சிருப்பதாக பலரும் சொன்னதை நான் கண்டுக்கலை. ஆனால், என் மீது பாசம் வைத்திருக்கும் மக்கள் ரொம்பவும் கோபத்தில், வேகத்தில் இருக்காங்க. அதனால் இந்தப் பிரச்னை பெருசாகிருச்சு.என்னையும் இந்த ஜமீனையும் பற்றி முன்பின் அறியாதவர்கள் தவறு செய்ய வாய்ப்பு இருக்கு. ஆனா, பாலா எனக்கு உறவுக்காரப் பையன். படம் எடுக்கிற துக்கு முன்னால், என்னிடம் ஒரு வார்த்தை கலந்து பேசி இருக்கலாம். இப்போது இந்த அளவுக்கு ஆன பிறகாவது என்னிடம் பேசி இருக்கலாம். அல்லது அந்தக் கதாபாத்திரம் 'கற்பனையானது’னு கார்டு போட்டு இருக்கலாம். இது எதையும் செய்யலை. அப்படின்னா திட்டமிட்டே இதை செஞ்சதாதானே அர்த்தம். கொதிச்சுப்போன பலர் போராட்டம் நடத்த என்னிடம் அனுமதி கேட்டாங்க. நான்தான்  அவங்களைத் தடுத்தேன். ஆனாலும், மதுரையில் இந்தப் படத்துக்கு தடை கோரி 150 பெண்கள் ரத்தக் கையெழுத்துப் போட்டு முதல்வருக்கு மனு அனுப்பி இருக்காங்க. நான் எவ்வளவோ வற்புறுத்தியும் சமாதானம் அடையாத என் மகன் சங்கராத்மஜன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செஞ்சி ருக்கார்...'' என்றார் ஆற்றாமையுடன்.

    ஆனால் இயக்குனர் பாலாவோ ''படம் குறித்து என்னிடம்தான் பேசியிருக்க வேண்டும். அதைவிட்டு நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார். படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் கற்பனையே என்று டைட்டில் கார்டு போட வேண்டும் என்று சொல்வதற்கு இவர்கள் யார்?'' என்கிறார்.

   கடைசியாக கிடைத்த தகவலின் படி அம்பை நீதிமன்றதில் வழக்கு தொடரப்பட்டு, பாலா, ஆர்யா, படத்தயாரிப்பாளர், ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Thursday, June 23, 2011

''ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர் வாலியின் அந்தர்பல்டி

      


       முந்தைய ஆட்சிக்காலத்தில் கலைஞருக்கு நடந்த பாராட்டுக்கூட்டங்களில் கவிஞர் வாலி வாசித்த கவிதைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அதில் தான் எத்தனை முகஸ்துதிகள். இவர் போன்றோர் அடித்த ஜால்ரா சத்தத்தில் தன்னை மறந்து தூங்கிய கருணாநிதி ஆட்சியை கோட்டைவிட்டார்.
அதிலும் குறிப்பாக வாலி கருணாநிதியை புகழ்ந்த கவிதைகளை ஒரு புத்தகமாக போடலாம். அதே நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை தாழ்த்தி, நக்கல்- நையாண்டி செய்வார்.
    அதே வாலி சமீபத்தில் ரங்கநாயகி  என்ற தலைப்பில் எழுதிய கவிதை கீழே.....

                                          ரங்கநாயகி!

இலங்கையில்

இது காறும் நடந்தது -
போர் அல்ல; தீவிரவாதப்
போக்கினை அறவே...

தூர்க்கவேண்டித்
துப்பாக்கிகளில் -
ரவைகளை நிரப்பியதாம்
ராணுவம்!
சொல்கிறார்
'சோ’;
நாம்
நாணுவம்!

...

குலைகள் நடுங்கத் - தம்
குடில்கள் வாயிலில்...

சம்மணம் இட்டுச்
சாதாரணமாய் இருந்தோரை -

அம்மணம் ஆக்கினான்; அதன்பின்
அவர்தம் ஆவி போக்கினான்;

முலை உரித்து - மதுரை
மூதூரெரித்த மரபினரின்-
கலை உரித்தான்;
கற்பை உரித்தான்; உயிர்
கவர்ந்து கொடுங்
காலனெனச் சிரித்தான்!...

இத்துணை
இழிசெயல்களை இயற்றியோன் -
சிங்களக் காடை; இராணுவச்
சீருடையணிந்த பேடை!

தீர்த்தம் குறையாத் தேம்சு நதித்-
தீரத்திலிருந்து...

செயல்படும்
'CHANNEL 4’எனும்
தொலைக்காட்சி -
ஆவணப் படுத்தி
அகில மெங்கும் காட்டியது-
கொடுமை மலிந்த - மேற்சொன்ன
கோரம் மிகுந்த கொலைக்காட்சி!

...

இதுகண்டு
இதயம் கனத்து-
இங்கிலாந்துப் பிரதமரும்;
இதர பிரஜைகளும்...

'அச்சோ!’ என
அலறுவதை அறியாதவரா என்ன
இச் 'சோ’?

...

'சோ’ வைப்போல் - இச்
சோகத்தை...
அறிந்தும்
அறியாததுபோல்-
அறிதுயிலில்
அயர்ந்திருப்பவர்...

ஸ்ரீரங்கம் - அருள்மிகு
ஸ்ரீரங்க நாதர்; அவர்-
படுத்தபடி - இலங்கையைப்
பார்த்திருக்கிறார் என்று-
பாடுகிறார் - தொண்டரடிப்
பொடிகள் என்னும் தாதர்!

...

ஸ்ரீரங்கம் - தீவு;
ஸ்ரீலங்கா - தீவு;
தீவைப் பார்க்கிறது
தீவு;
ஆனால்
அக்கிரமத்திற்கொரு-
தீர்வைப் பார்க்க வேண்டாமா
தேவு?

அய்யா!
அரங்கநாதரே! - நீர்
பாம்பின்மேல்
படுத்து - வெறுமனே
பார்த்திருந்தால்
பயப்படுமா இலங்கை? அதன்காலில்-
பூட்டவேண்டாமா
'போர்க்குற்றம்’ எனும் விலங்கை?

'அருளாதாரம் இன்றித் - தமிழரை
அழித்தொழித்தார்க்குப்-
பொருளாதாரம் இன்றிப்
போகக் கடவது!’ - என்று...

விரைந்து - நீர்
விதித்திருக்க வேண்டாமா தடை?
தூங்கிக்கிடக்கவா - உமக்கு
தோசை; நெய்ப்பொங்கல்; வடை?
...

ரங்க நாதரே! - உங்கள்
ரங்க நாயகி...
உலக
உயிர்க்கெலாம் தாய்;
ஈழத் தமிழனும் - அவள்
ஈன்றெடுத்த சேய்!

 'பொறுத்தது போதும்’ எனப்
பொங்கி எழுந்தாள்;
அவள் தாள்தான் - இன்று
அனைத்துத் தமிழரும் தொழுந்தாள்!

 சான்றோர்
சபையைக் கூட்டி-
'போர்க்குற்றம்’ எனக் கூறினாள்;
பொருளாதாரத் தடை கோரினாள்!

...

வாக்களித்த ஸ்ரீரங்கத்து மக்கள்
வாழ்த்துகிறார்கள் இன்று-
'எங்க நாயகி’தான் - அந்த
ரங்க நாயகி என்று!
 ----------------------------------



'' கொட நாடு
அது கொடா நாடு '

இது வாலி அன்று கலைஞருக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்தில் வாசித்த வரிகள்.
ஆட்சியாளரை புகழட்டும். ஆனால் தேவையில்லாமல் ஜெயலலிதாவை இகழ வேண்டுமா?
ஆட்சி மாறியதும் ''கொடா நாடு'' ''எங்க நாயகி'' ஆகிவிட்டது.


   இதை படித்ததும் ''இந்தியனில்'' கவுண்டமணி சொன்னது நினைவுக்கு வருகிறது.
   '' அந்தர்பல்டிடா சாமி ''

 
  

Friday, March 11, 2011

தலைவலிக்கு சிறந்த மருந்து

       காலையில் எழுந்திருக்கும் போதே தலை கிண்ணென்றிருந்தது. கண்ணை திறக்க முடியவில்லை. நேற்றிரவு ' நடுநிசி நாய்கள் ' பார்த்த பாதிப்போ என்னவோ. 
    '' ராதா ''வென கூப்பிட வாயெடுத்தேன். அதற்கு முன்பே மெல்லிய கொலுசொலி.
      தலைக்கு குளித்து சரியாக துவட்டாத கூந்தலின் நுனியில் ஈரம் சொட்ட, அப்போதே மலர்ந்த பூவாக அருகில் வந்து என் தலைக்கருகில் கட்டிலில் அமர்ந்தாள், என் முகத்தை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவள் '' என்னங்க தலைவலியா ? '' என்றாள் நான் சொல்லாமலே.
      மெல்லிய விரல்களால் சற்று சூடாக இருந்த என் நெற்றியை தொட்டாள். வைகறையில் பறித்த மல்லிகை இதழ்களால் தொட்டது போலிருந்தது. அவள் கையை என் நெற்றியுடன் அழுந்த பிடித்தேன்.
     '' நேற்று நல்லாத்தானே தூங்கினீங்க '' என்றவாறு என் தலையை மெதுவாக கோதினாள்.  கண்களை திறந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். வட்ட முகத்தில் சற்றே பெரிய கண்கள். கூரான நாசி .சிவந்த சிறிய ஆரஞ்சு சுளை போன்ற இதழ்கள். அவள் சிரிக்க நினைத்ததை கன்னக்குழியும் கண்களும் காட்டி கொடுத்தன.
    '' என்ன பார்வை ''
    '' இல்ல... பார்த்தால் பசி தீரும்னு சொல்வாங்க. தலைவலி தீருமான்னு தெரியல.''
    '' நிஜமாகவே தலைவலி தானா '' என்றாள் புன்முறுவலுடன். 
    '' தலை ரெம்ப பாரமா இருக்குடி ''
      சிரித்தவாறே என் நெற்றியில் அவள் கன்னம் அழுந்த என்மீது சாய்ந்தாள். ஈர கூந்தல் என் முகத்தில் படர்ந்தது. கன்னத்தின் குளிர்ச்சி என் நெற்றிக்கு பரவ, சோப் வாசமும் ஷாம்பு வாசமும் கலவையாக என் நாசியை வருட, அவள் மூச்சுக்காற்று லேசான சூட்டில் முகத்தில் பட எனக்கு என்னவோ செய்தது. கண்களை மூடி படுத்திருந்தேன். மெத்தென்று நெஞ்சில் சாய்த்துக்கொண்டாள். 
    '' இப்ப வலி குறையுற மாதிரி இருக்கு ''  நெஞ்சோடு சேர்த்தணைத்து முத்தமிட்டாள்.
    '' இன்னும் குறையுது.''
    '' டாக்டர் ஃபீஸ் என்ன கொடுப்பீங்க.''
    '' என் உயிரை கூட.''
    '' அச்சச்சோ.''.என் வாயை மூடினாள் முதலில் விரல்களால் .....  எத்தனையோ பெண்கள் அழகாக இருப்பார்கள். என்னவள் ராதா அழகு மட்டுமல்ல அன்பால் அழகை நூறு மடங்கு அதிகமாக்கியவள். 
      கொஞ்ச நேரம் தூங்கிவிட்டேன். ராதாவின் இதழ்கள் என் நெற்றியில் ஒத்தி பிரியும்போது தான் விழித்தேன். தலைவலி முற்றிலும் இல்லை.
     ''காபி தரவா ? '' என்று எழுந்து போனவள் சூடான காபியுடன் என்னருகில் வந்தாள். கால் இடரியதா என்னவென்று தெரியவில்லை காபியை என் முகத்தில் கொட்டிவிட்டாள். அம்மா!!!!!!!.....திடுக்கென முழித்துப் பார்க்கிறேன் முகத்தில் தண்ணீர். கையில் செம்புடன் என் மனைவி கனகா.
     ''காலையிலிருந்து நாயா வேலை பார்த்துட்டு இருக்கிறேன் இன்னும் என்ன தூக்கம்...பிள்ளைகளை ஸ்கூலுக்கு கிளப்ப வேண்டாமா. மனுஷனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு வேணும்....'' கத்திக்கொண்டிருந்தாள்.
      மீண்டும் தலை வலிப்பது போலிருந்தது. கண்களை மூடி ராதாவை தேடலானேன்.
  
     பின்குறிப்பு : மருத்துவ பதிவென்று படிக்க வந்தவர்கள் மன்னிக்கவும்

     பின்குறிப்பு 2 : இதை படித்து முடித்ததும் உங்களுக்கு லேசாக பெருமூச்சு வந்தால் ..''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்''