Monday, August 1, 2011

''மயக்கம் ''அறியாமல் நீங்கள் நிகழ்த்தும் மரணங்கள்!
சமீபத்திய இரண்டு சம்பவங்கள் (மரணங்கள்) எனக்கு இந்த பதிவை எழுத தூண்டியது.

ஒன்று.

நான் அடிக்கடி செல்லும் எனது நண்பரின் எதிர் வீட்டு பாட்டி. அறுபது வயதை நெருங்கும் அவருக்கு சுகர், பிரஷர், இதய நோய், போன்ற எதுவும் கிடையாது. நல்ல ஆரோக்கியமானவர். ஒருநாள் காலைமுதல் உண்ணா நோன்பு இருந்தவர், மாலை வெந்நீரில் குளித்துக் கொண்டிருக்கும் போது, இரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்திருக்கிறார். சப்தம் கேட்டு பாத்ரூமுக்குள் சென்ற மகள் (அவர் ஒரு கல்லூரி பேராசிரியை) அவரை தூக்கி உட்காரவைத்துவிட்டு மற்றவர்களை கூப்பிட்டிருக்கிறார். தற்செயலாக சென்ற நான் பார்க்கும் போது பாட்டி இறந்திருந்தார்.

இரண்டாவது,

இருபத்தைந்து வயதுடைய இளைஞன். கூலித்தொழிலாளி, நான்கு நாள் காய்ச்சலுக்குப் பின் வயல் வேலைக்கு சென்றிருக்கிறான். லேசாக மயக்கம் வருவது போலிருக்க, அருகிலுள்ள மாமரத்தில் சாய்ந்து அமர்ந்திருக்கிறான். சிறுநேரம் கழித்து சகதொழிலாளி பார்க்கும்போது அவன் உடம்பில் உயிர் இல்லை.
    
இந்த இரண்டு மரணங்களுக்கும் காரணம், அவர்களின் உடல்நிலை மட்டுமல்ல. பாட்டியின் மகளும், மாமரமும் கூட.

      இந்த இருவருக்கும் மரணத்தை உண்டாக்கும்  அளவுக்கு பெரிய நோய் ஒன்றுமில்லை. இவர்கள் மயக்கமுறும்போது தூக்காமல், படுக்கவைத்திருந்தாலே பிளைத்திருப்பார்கள். நன்கு படித்திருந்தும், பாட்டியின் மகளுக்கு முதலுதவி தெரியாததால் பாட்டியை காப்பாற்ற முடியவில்லை.  

     மயக்கம்(syncope) எதனால் வருகிறது?

     நெடுநேரம் நின்றுகொண்டே இருப்பது, பசி, இரத்த சோகை உள்ளோர், அதிக வெயிலில் நின்று வேலை செய்வோர்(heat stroke),  ஆகியோருக்கு இரத்த அழுத்த குறைவு ஏற்படும் (Low BB).  இதனால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மயக்கம் உண்டாகும். இவ்வாறு மயக்கமாகி கீழே விழும் போது, உடல் சமநிலைக்கு வருவதால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகி சிறிதுநேரத்தில் மயக்கம் தெளிந்துவிடும். இதுதான் இயல்பாக நடப்பது. ஆனால் நாம் உதவி செய்கிறோமென்ற பேரில், தூக்கி உட்காரவைத்து, முகத்தில் சோடா தெளித்து ஒருவழியாக  கொன்றுவிடுகிறோம்.

     என்ன செய்யவேண்டும்?

     மயக்கமானவரை உடனடியாக படுக்கவைத்து அவர் கால்கள் இரண்டையும் தூக்கிப் பிடிக்க வேண்டும் (60 முதல் 90 டிகிரி வரை )
தலைக்கு எந்த உயரமும் (தலையணையோ) கொடுக்க கூடாது. படுக்கவைத்த பின் முகத்தில் குளிர்ந்த நீரை தெளித்தால் தப்பில்லை. மிக குறுகிய நேரத்திற்குள்ளாகவே தெளிந்து விடுவார். கிட்டத்தட்ட எல்லாவிதமான மயக்கங்களுக்கும் இது பொருந்தும்.
    
     மற்றும் சில முதலுதவிகள்:

     நமக்கு நன்கு தெரிந்த ஒரே முதலுதவி பாம்பு கடித்துவிட்டால் அரைஞான் கயிற்றை அவிழ்த்து கடிவாய்க்கு  மேலே கட்டுவது மட்டுமே.(கழுத்தில் கடித்தால் ?........)

     ஒருவருக்கு வலிப்பு வந்தால், கையில் இரும்பை கொடுப்பதில் பயனில்லை என்று அநேகமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும். வேறு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?.
     அவர் கழுத்தை தோள் பக்கமாக சாய்க்க வேண்டும். வலிப்பின்பொது நாக்கை கடித்துவிடாமல் இருக்க ஏதாவது ஒரு துணியை அல்லது பஞ்சை பற்களுக்கு இடையே வைக்க வேண்டும். வைக்கும் போது உங்கள் விரல் பத்திரம். சுமார் 15 நிமிடங்களுக்குள் சுயநினைவு வரும். சினிமா கதாநாயகி போல ‘’நான் எங்கே இருக்கேன்’’ என்று சிலர் கேட்பர். தவறில்லை. கால்மணி நேரத்தில் சுயநினைவு வரவில்லை என்றாலோ, அடுத்தடுத்து வலிப்புகள் வந்து கொண்டிருந்தாலோ உடனே மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவும்.

     நெஞ்சுவலி வந்தவர்க்கு என்ன செய்ய வேண்டும் என எனது heart attack பதிவில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

     இப்பதிவில் சொல்லப்பட்ட முதலுதவிகள் உங்களில் பலருக்கு தெரியாதென்று நினைக்கிறேன்.

     அடிப்படை மருத்துவ கல்வியும் முதலுதவியும் பள்ளிப் பாடங்களிலேயே சேர்க்கப்பட வேண்டும்.


பின்குறிப்பு 2: இப்பதிவின் பயன் பலருக்கு கிடைக்க, தவறாமல் ஓட்டளியுங்கள்.

11 comments:

 1. ரொம்ப நன்றி ஸார்...
  உங்கள் லின்க்;ஐ என் ஃபேஸ்புக்`இலும் பகிர்கிறேன்.
  முதல் போட்டோவில் உள்ளது போல் வாய் மேல் வாய் வைத்து ஊதுவதின் காரணம் என்ன?? அதன் மூலம் O2வுக்கு பதிலாக CO2வையே செலுத்துகிறோம். அது நோயாளிக்கு பாதிப்பில்லையா????

  ReplyDelete
 2. மிக்க நன்றி Mohamed Faaique,
  நீங்கள் கேட்கும் வாய் மேல் வாய் வைத்து ஊதுவதை Mouth to Mouth Resuscitation என்போம். அவ்வாறு செய்வதால் தடைப்பட்ட சுவாசம் சீராகும். நுரையீரலை இயங்க செய்வதற்காக செய்யப்படும் முதலுதவி.

  ReplyDelete
 3. //அடிப்படை மருத்துவ கல்வியும் முதலுதவியும் பள்ளிப் பாடங்களிலேயே சேர்க்கப்பட வேண்டும்///

  கண்டிப்பாக!

  ReplyDelete
 4. அதிர வைக்கும் கருத்துக்கள். இதுவரை எனக்கும் இந்த விஷயம் எல்லாம் தெரியாது. மிக்க நன்றி.

  ReplyDelete
 5. இந்த இடுகையை தமிழ்மணத்தில் இணைக்க நண்பர்கள் வலியுறுத்துகிறார்கள். எனக்கு தெரியவில்லை.news feed எப்படி கொடுப்பதென்று தெரியவில்லை. யாராவது உதவவும்.

  ReplyDelete
 6. மிக்க நன்றி... நண்பா...

  பயனுள்ள முதலுதவி.... மனதில் இருத்த வேண்டியவை...

  ReplyDelete
 7. நல்ல பதிவு...உங்களிடம் நான் நிறைய கற்றுகொள்கிறேன்...Hon.D R ...ஆகிவிடுவேன் போல...

  ReplyDelete
 8. yellorukkum therinjukka vendiya mukkiyamaana visayam. super

  ReplyDelete
 9. Excellent advice!

  ReplyDelete
 10. அடிப்படை மருத்துவ கல்வியும் முதலுதவியும் பள்ளிப் பாடங்களிலேயே சேர்க்கப்பட வேண்டும்.

  ReplyDelete